WhatsApp
WhatsApp

ரெபெக்காளுடைய வாழ்க்கையின் பாடங்கள்

Aug 15, 2026 By Hephzibah Stephen

வேதப்பகுதி: ஆதியாகமம் 24:45-58

 

ரெபெக்காளின் வாழ்க்கை ஆதியாகமத்தின் முக்கியமான கதைகளில் ஒன்றாகும்.   இந்தியாவில் நடைபெறும் திருமண நிச்சயதார்த்த நிகழ்வுகளில் அவரதுகதை எப்போதும் வாசிக்கப்படுகிறது!   ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டபோது அவள், ஒருபோதும் சந்திக்காத ஒரு மனிதனை திருமணம் செய்து கொள்வதற்காக போகிறேன் என்று சொன்ன பதில் வேதத்தின்  விசுவாச அறிக்கைகளில் ஒன்றாக உள்ளது!  

 

ஆபிரகாமின் வேலைக்காரன் ஈசாக்கிற்கு மணப்பெண் தேடி சென்ற போது, ரெபெக்காள் அவருக்கு மட்டுமல்ல, அவரது பத்து ஒட்டகங்களுக்கும்  தண்ணீர்கொடுத்தார்.   இது ஒரு சிறிய கருணை செயல் அல்ல.   இது கடின உழைப்பையும் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தியது.   விசுவாசத்தில் தொடங்கியவாழ்கை, பின்பு தடம் புரண்டதை காண்கிறோம்

 

கடவுளின் வாக்குறுதிகள் மனிதத் திட்டங்களால் நிறைவேற்றப்படுவதில்லை.  அவை நம்பிக்கை, கீழ்ப்படிதல் மூலமே  நிறைவேற்றப்படுகின்றன என்பதைஅவரது வாழ்க்கை நமக்குக் கற்பிக்கிறது.   

 

ரெபெக்காவுக்கு பிள்ளைக்காக ஈசாக்கு ஜெபித்தார், கடவுள் பதிலளித்தார்.   அவளுடைய கடினமான கர்ப்ப காலத்தில், அவள் கர்த்தரைத் தேடினாள், மூத்தமகன் இளையவருக்கு சேவை செய்வார் என்று கடவுள் வெளிப்படுத்தினார் (ஆதியாகமம் 25:23)   கடவுளின் வாக்குறுதியை ரெபெக்காள் தெளிவாகஅறிந்திருந்தாள்.

 

இருப்பினும் இங்குதான் அவரது கதை மாறுகிறது. 

 

கடவுளுடைய வார்த்தை நிறைவேற காத்திருப்பதற்குப் பதிலாக, அவள்  சதித்திட்டம் தீட்டி ஈசாக்கின் ஆசீர்வாதத்தைப் யாக்கோபு பெறுவதற்காக ஏமாற்றினார்.அதினால் அவரது குடும்பம் சிதைந்தது.   ஏசா யாக்கோபை வெறுத்தார், யாக்கோபு தன் உயிரைப் பணயம் வைத்து ஓடிப்போக வேண்டியிருந்தது, ரெபெக்காள்தன் அன்பான மகனை மீண்டும் ஒருபோதும் பார்க்கவில்லை.   ஆசீர்வாதம் கிடைத்தது, ஆனால் வீட்டில் சந்தோசம் சமாதானம் ஒழிந்தது.  

 

கடவுளின் வாக்குறுதிகளை பெற்றுக்கொள்ள  குறுக்குவழிகள் தேவையில்லை என்பதை ரெபெக்காவின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது.  

 

பாரபட்சம் குடும்பங்களை அழிக்கிறது.   கடவுளின் சித்தத்தை நாம் அறிந்திருக்கலாம், ஆனால் ஆண்டவரின் நேரத்துக்கு காத்திருக்கவேண்டும்.   இலக்குமட்டுமல்ல, அங்கு செல்வதற்கு நாம் எடுக்கும் பாதையையும் தேவன் கவனிக்கிறார்.   

 

என் நண்பரே, கடவுளின் நோக்கங்களை நிறைவேற்ற மனித முறைகளை தேடுகிறோமா என்று நம்மை இன்று சோதித்து பார்க்க அழைக்கப்படுகிறோம். நமதுமுடிவுகளில் பக்கச்சார்பின்மை,  பொறுமையின்மை ஆகியவற்றை நாம் அனுமதிக்கிறோமா?   கடவுளின் நேரம் மெதுவாகத் தோன்றினாலும் உண்மையானவிசுவாசம் காத்திருக்கிறது, பிரார்த்தனை செய்கிறது, கீழ்ப்படிகிறது.   அதுவே இன்று நமக்கு இருக்கும் சவால்.

 

ஜெபம்ஃ கர்த்தராகிய இயேசுவே, உம் நேரத்திற்காக பொறுமையுடன் காத்திருக்க எனக்கு உதவும். நம்பிக்கையுடன் காத்திருக்க கிருபை தாரும்.   ஆமென்.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *