நம்மை விசாரிக்கும் தேவன்

Jan 19, 2026 By Hephzibah Stephen

வேத பகுதி : சங்கீதம் 34:1-22

 

சில நேரங்களில் கடவுளின் பரிபூரணம் நமக்கு சம்பவிக்கும் காரியங்கள் மூலம் மட்டும் அல்ல, நடக்காத காரியங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தப்படுகிறது.

 

ஒரு அன்பான நண்பர் ஒருமுறை ஒரு சாட்சியைப் பகிர்ந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மகள் பெங்களூரில் பணிபுரிந்த போது அமெரிக்காவிற்கு செல்லும் ஒரு தருணத்தை அவளுக்கு அந்த நிறுவனம் அளித்ததால் மிக உற்சாகமாக இருந்தாள்; ஆவணங்கள், திட்டங்கள், பயணத் தேதி என அனைத்தும் உறுதி செய்யப்பட்டன.  ஆனால், புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, குழுவின் தலைவர்   நிறுவனத்தில் அவரை விட மூத்த இரண்டு ஊழியர் இருப்பதால் அவர்கள் செல்லவேண்டும்;  அதனால் அவளை அமெரிக்கா அனுப்ப முடியாத சூழ்நிலை உண்டாயிற்று என்று கூறினார்.  அவரது மகள் மனம் உடைந்தாள்; ஏமாற்றமடைந்தாள்; கண்ணீர் விட்டாள்.  அந்த நேரத்தில் நடந்த காரியங்கள் எதுவும் நியாயமான காரியமா என்று அவளால் உணர முடியவில்லை.  ஒரு வாரம் கழித்து, கற்பனை செய்ய முடியாதது நடந்தது.   அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் சதியினால் இடிந்ததால் அவளுக்குப் பதிலாக சென்ற அவளுடைய இரு சக ஊழியங்களும் முதல் நாளிலே அங்கே இறந்தனர்.  அவள் கசப்பான ஏமாற்றம் போல் உணர்ந்ததை பின்னோக்கிப் பார்க்கும் போது அது தேவனுடைய, ஒரு இரக்கமுள்ள தடையாக காணப்பட்டது. .

 

மூடிய கதவுகளை தோல்விகள், தாமதங்கள் அல்லது அநீதிகளாக நாம் பார்க்கிறோம். ஆனால் கடவுளுடைய ஞானம் நமது காலக்கெடுவுக்கும் நமது எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டது. கடவுள் நம்மிடம் "வேண்டாம்" என்றாலும், காத்திரு என்றாலும் அல்லது வேறுவழியாக நம்மை நடத்தினாலும் அது நாம் பார்க்கவோ கற்பனை செய்யவோ முடியாத ஆபத்துக்களிலிருந்து நமக்கு விடுதலை  அளிக்கும் ஆண்டவரின் வழியாக இருக்கும்.

 

சங்கீதக்காரன் (சங். 121:8) ல், "கர்த்தர் உன் போக்கையும்  என்றென்றைக்கு உன் வரத்தையும் இது முதற்க்கொண்டு  காப்பார்" என்று எழுதியுள்ளான்.  அந்த வாக்குறுதி வாழ்க்கை எப்போதும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அர்த்தமல்ல. நமது திட்டங்கள் நடக்காமல் போனாலும் கூட, நாம் ஒருபோதும் கடவுளின் கவனத்திற்கு வெளியே இல்லை என்று அர்த்தம்.

 

நாம் விரும்பும் வழியில் காரியங்கள் நடவாதபோதோ, வாய்ப்புகள் மறைந்து போகும்போதோ, ஜெபங்கள் பதிலளிக்கப்படாததாகத் தோன்றும்போதோ அல்லது திட்டங்கள் வீழ்ச்சியடையும் போதோ  - முடிவை பாராமல் கடவுளின் குணாதிசயங்களை நம்புவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். இன்று நடக்கவில்லையே என்று யோசிக்கும் போது பாதுகாப்புக்காக இருக்கலாம். தாமதமாகிறதே என்று சிந்திக்கும் போது அது கண்டிப்பாக தேவனுடைய நேரத்தில் நடக்கும்.

 

என் நண்பரே, உங்கள் திட்டம் செயல்படவில்லை என்று நீங்கள் ஏமாற்றமடைகிறீர்களா? அந்த வாய்ப்பின் கதவை கடவுள் மூடிவிட்டார் என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?  தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது  என்று ரோமர் 8:28 வாசிக்கிறோம்.  சில நேரங்களில், நாம் குறைவாக புரிந்து கொண்ட தருணங்களிலும் தேவன் எவ்வளவு ஆழமாக செயல்பட்டார் என்பதை நித்தியத்தில் மட்டுமே புரிந்து கொள்ளுவோம்.

 

ஜெபம்:  கர்த்தராகிய இயேசுவே, எங்களை சுற்றி நடக்கும் காரியங்களை நாங்கள் புரிந்து கொள்ளாதபோது உம்மை நம்ப எங்களுக்கு உதவுங்கள். உங்கள் வழிகள் எங்களுடையதை விட உயர்ந்தவை என்றும், எங்கள் ஏமாற்றங்களில் கூட. உங்கள் அன்பு எப்போதும் கிரியை செய்கிறது என்றும் நம்புவதற்கு எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள் - ஆமென்.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *