கிருபையின்மேல் கிருபை
வேதப்பகுதி: யோவான் 1:1-16
எபேசியர் 2:8-9, “ கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. இரட்சிப்பு என்பது கடவுளின் இலவச பரிசு”. ஆனால் கிருபையானது கிரயமில்லாமல் வருவது இல்லை. நம் இரட்சகராகிய இயேசு தன் உயிரையே கிரயமாகச் செலுத்தினார். நம்முடைய மனந்திரும்புதல், கீழ்ப்படிதல் மற்றும் பரிசுத்த வாழ்க்கை மூலம் கிரயம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.
டீட்ரிச் பான்ஹோஃபர் (1906-1945) ஒரு ஜெர்மன் லூத்தரன் போதகர். ஹிட்லருக்கு தைரியமாக எதிர்ப்பு தெரிவித்த ரத்த சாட்சி, சீடத்துவம், கிருபை மற்றும் கீழ்ப்படிதல் பற்றிய அவரது ஆழமான கருத்துக்களுக்காக அறியப்பட்டவர். பான்ஹோஃபரின் கூற்றுப்படி, மலிவான கிருபை என்பது மனந்திரும்புதலில்லாத மன்னிப்பு, ஆலய ஒழுக்கம் இல்லாத ஞானஸ்நானம் மற்றும் உண்மையான அறிக்கை இல்லாத பரிசுத்த பந்தியில் பங்கு பெறுவது போன்றவைகள் சரி என்று பிரசங்கிப்பது ஆகும். சீடத்துவம் சிலுவை மற்றும் கீழ்ப்படிதல் இல்லாத கிருபை மலிவான கிருபையாக காணப்படுகிறது.
ஒரு விசுவாசிக்கு, கடவுளின் கிருபை ஒவ்வொரு காலையிலும் புதியதாக அருளப்படுகிறது (புலம்பல் 3:22-23). இந்த கிருபை கிறிஸ்துவின் நிறைவிலிருந்து பாய்கிறது. நாம் நன்றாகச் செயல்படுவதால் அல்லது நீண்ட நேரம் ஜெபம் செய்வதால் நமக்குக் கிருபை கிடைப்பதில்லை. இயேசு இரக்கமும் கிருபையும் நிறைந்தவர் என்பதால் நாம் கிருபையைப் பெறுகிறோம். நாம் பெறுவது நமது வலிமையைப் பொறுத்தது அல்ல, அது அவருடைய தாராளத்தைப் பொறுத்தது. "யோவான் 1:16 ல்" அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம் “ என்று வாசிக்கிறோம். இந்த கிருபை கிறிஸ்துவின் நிறைவிலிருந்து நமக்கு கிடைக்கிறது.
'கிருபை மேல் கிருபை' என்ற சொற்றொடர் கிருபை நமக்கு மேலும் மேலும் அருளப்படுகிறது என்று அறிவுறுத்துகிறது. கிருபையின் ஒரு அனுபவம் அதன் வேலையைச் செய்த பின், மற்றொன்று பின்தொடர்கிறது. மனமாற்றத்திற்கான கிருபையை மறுரூபத்திற்கான கிருபை தொடர்ந்து வருகிறது. மன்னிக்கும் கிருபையைத் தொடர்ந்து உள்ளதைக் குணப்படுத்தும் கிருபை வருகிறது. கடவுளின் குடும்பத்திற்குள் நம்மை வரவேற்கும் கிருபையை தொடர்ந்து நாம், கடவுளின் குழந்தைகளாக வாழ நம்மை மாற்றும் கிருபையையாக அருளப்படுகிறது.
கிறிஸ்துவில் எப்போதும் அதிக கிருபை இருக்கிறது. நேற்று பெற்ற கிருபை இன்றைய தேவைக்கு போதுமானதாக இல்லை என்று உணரும்போது, கடவுள் அதிகக் கிருபையை தருகிறார்!. நாம் கிருபையின் மேல் கிருபையைப் பெறும்போது, பொறுமையுடனும், தாராளமாகவும் மற்றவர்களுக்கு கிருபையை கொடுக்கும் மக்களாக நாம் மாறுகிறோம்.
என் நண்பரே, இன்று, நீங்கள் சுமக்கும் சுமை எதுவாக இருந்தாலும், அதை கிறிஸ்துவிடம் கொண்டு வாருங்கள். அவரது கிருபை எப்பொழுதும் உங்களைதாங்கும்.
ஜெபம்: இயேசுவே, நான் கிறிஸ்துவின் நிறைவை பெற்றுக்கொள்ள எனக்கு உதவுங்கள், ஏனென்றால் அவருடைய கிருபை எனக்கு போதுமானது. ஆமென்.
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
