இயேசுவிடம் வாருங்கள்
வேதப்பகுதி லூக்கா 15:11-24
லூக்கா 15 இல் உள்ள கதை, இரண்டு மகன்களைப் பற்றியது மட்டும் அல்ல, அது தந்தையைப் பற்றியது ஆகும்.
இளைய மகன் வீட்டை விட்டு வெளியேறி தூர நாட்டிற்குச் சென்றான். இறுதியில் அவன் பன்றிகளுக்கு உணவளிக்கும் மிகத் தாழ்வான நிலையை அடைந்தான். மகன் தந்தையை மறந்தாலும், தந்தை தனது மகனை ஒருபோதும் மறக்கவில்லை.
மகன் தனக்கு சேரவேண்டிய சொத்தின் பங்கை கேட்டபோது, தந்தை மறுக்கவில்லை. அவன் போவதற்கு அனுமதித்தார். அன்பு என்பது கட்டாயப்படுத்தாது. தந்தையோ நம்பிக்கையை இழக்கவில்லை.. அனுதினமும் அவரது கண்கள் பாதயை நோக்கிக்கொண்டே இருந்தன. அவன் தூரத்தில் இருக்கையில் அவனுடைய தகப்பன் அவனைக் கண்டார் (லூக்கா 15:20). அவனுடைய உருவத்தை அடையாளம் கண்டார். .
அவன் தகப்பன் சீக்கிரமாய் ஒரு சிறந்த அங்கியைக் கொண்டுவந்து, அதை அவனுக்கு உடுத்தி, அவன் விரலுக்கு ஒரு மோதிரத்தையும், அவன் கால்களுக்குச் செருப்பையும் போடுங்கள் என்றார் (லூக்கா 15:22). அவனை எந்தக்கேள்வியும் கேட்கவில்லை, அவனுடைய தகுதியை பார்க்கவில்லை, வெட்கப்படவில்லை. அவன் இருந்த வண்ணமாகவே அவனை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார். அந்த மகனுக்கு ஒரு புதிய தொடக்கம். “கிருபை” குற்ற உணர்ச்சியை வென்றது.
இந்தத் தகப்பனார் தினத்தன்று, கடவுள் நம்மிடம் சில கேள்விகளைக் கேட்கலாம்.
நீங்கள் நீண்ட காலமாக பேசாத உங்கள் தந்தை அல்லது தாய் உங்களுக்கு உண்டா? எனது தந்தை ஆண்டவரிடம் சென்றுவிட்டார், நான் விரும்பினாலும் இப்போது அவருடன் பேச முடியாது. நீங்கள் மன்னிக்க வேண்டிய மகன், மகள், சகோதரர் அல்லது நண்பர் இருக்கிறாரா? இன்று உடனே ஒப்புரவாகுங்கள். கடவுளிடம் இருந்து மிகுந்த மன்னிப்பை பெற்ற நாம், மற்றவர்களுக்கு மன்னிக்க கடமை பட்டிருக்கிறோம்
கடவுளையும் குடும்பத்தையும் விட்டுவிலகி வழிதவறிப்போன ஒரு பிள்ளை உங்களுக்கு உண்டா? ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம். நாம் பார்க்க முடியாவிட்டாலும் கடவுள் எப்போதும் கிரியை செய்கிறார் என்று லூக்கா 15-ல் உள்ள தந்தை நமக்குக் கற்பிக்கிறார்.
நம்முடைய பரலோகத் தகப்பன் ஒரு பரிபூரணர். அவருக்கு வழிதவறி சென்ற பிள்ளைகள் ஏராளமாக உள்ளனர். இருப்பினும், அந்தப் பிள்ளைகள் அவரிடம் வரவும், இளைப்பாறவும், அவருடைய கிருபையைப் பெறவும் அவருடைய கரங்கள் எப்பொழுதும் திறந்திருக்கும். நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது நமக்கு மன்னிப்பு உண்டு.
நம்முடைய உடைந்த உறவுகளை சரிசெய்ய நம்மால் முடிந்தவரை முயற்சிக்கும்போது நாம் இளைப்பாறுதலையும், சமாதானத்தையும் காணலாம். நம்முடைய முழு இருதயத்தோடும் மனதோடும் இயேசுவை நம்பும்போது நாம் இளைப்பாறுதலையும், சமாதானத்தையும் காணலாம்.
என் நண்பரே, நம்முடைய பரம தந்தை நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார், திறந்த கைகளுடன் வரவேற்கத் தயாராக இருக்கிறார். இயேசுவிடம் வந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஜெபம்:- பரலோகத் தந்தையே, உங்கள் இடைவிடாத அன்பு மற்றும் பொறுமைக்கு நன்றி. உங்கள் பிள்ளைகளை நீங்கள் ஒருபோதும் கைவிடவில்லை என்பதற்கு நன்றி. நீர் எங்களை மன்னித்தது போல் மற்றவர்களை மன்னிக்கவும், உமது கிருபையை நம்பவும் எங்களுக்கு உதவுங்கள். ஆமென்.
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
