ஆண்டவரே, நானா?
வேதப்பகுதி: மாற்கு 14:12-21
கடந்த ஞாயிற்றுக்கிழமை, எங்கள் மீட்பர் ஆலயத்தில் ஆங்கில பாடகர் குழுவினர், 'ஆண்டவரே, இது நானா?' என்ற தலைப்பில் மிகவும் அர்த்தமுள்ள பாடலைப் பாடினார்கள். பாடல் எழுத்தாளரின் பெயரை என்னால் பெற முடியவில்லை, ஆனால் இப்பாட்டின் பல்லவி ஒரு சக்திவாய்ந்த சிந்தனையைக் காட்டுகிறது.
ஆண்டவரே இது நானா? ஆண்டவரே இது நானா?
யாரோ ஒருவர் உம்மை வஞ்சித்தார்கள்; இது நானா?
லட்சங்களில் மக்கள் மடிகிறார்கள்; அவர்கள் அழுகையின் சத்தம் கேட்கிறதே!
யாரோ ஒருவர் உம்மை வஞ்சித்தார்கள்; இது நானா?
“நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” என்ற மாபெரும் ஆணையத்திற்கு கீழ்ப்படியாமல் இழந்த ஆன்மாக்களைப் பற்றி இந்த பாடல் பேசுகிறது. செயல் இல்லாத விசுவாசம் முழுமையடையாது (யாக். 2:17). கிறிஸ்துவை நேசிப்பது என்பது அவர் தனது உயிரைக் யாருக்கெல்லாம் கொடுத்தாரோ அவர்களை நேசிப்பதாகும்.
பஸ்கா இரவில், மேல் அறையில், இயேசு தன்னுடன் சாப்பிட்டவர்களில் ஒருவர் தன்னைக் காட்டிக்கொடுப்பார் என்று சீடர்களிடம் கூறினார், அவர்கள் துக்கமடைந்து, ஒவ்வொருவராக அவரிடம், "நானா? என்று கேட்டார்கள் (மாற்கு 14:19) யூதாசும், "ரபீ, நானா?” என கேட்க இயேசு ஆம் என்று கூறினார். ஆனால் யூதாஸ் அந்த பதிலை அவன் உள்ளத்தில் பதிக்கவில்லை (மத்தேயு 25:26)
ஆண்டவரே, நானா? என்ற சிந்திக்க வைக்கும் கேள்விக்கு ஒரு நேர்மையான பதில் தேவை! இந்தக் கேள்வி நம்மை கண்டனம் செய்வதற்காக அல்ல; நம் இதயங்களை எழுப்புவதற்கும், மனந்திரும்புவதற்கும், கீழ்ப்படிவதற்கும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மன உருக்கத்திற்கான அழைப்பாகும்.
பணக்கார வாலிபனொருவன் இயேசுவிடம் வந்து, நித்திய ஜீவனை பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். கட்டளைகளைக் கடைப்பிடிக்குமாறு இயேசு கூறினார், அவன் இளமையிலிருந்தே அவற்றைக் கடைப்பிடிப்பதாக கூறி "என்னிடம் இன்னும் என்ன குறை இருக்கிறது?" என்று கேட்டான். இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசு சொன்னதைச் செய்ய விரும்பவில்லை. துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். (மத்தேயு 19:20-22). யூதாஸ் சரியான கேள்வியைக் கேட்டார், ஆனால் தொடர்ந்து இயேசுவைக் காட்டிக்கொடுத்தான்.
சரியான கேள்வியைக் கேட்பது மட்டும் போதாது; நாம் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும்.
என் நண்பரே! இந்த லெந்து காலத்தில், நீங்கள் தொடர்ந்து பாவம் செய்வதன் மூலம் இயேசுவை மீண்டும் சிலுவையில் அறைகிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை முறையின் காரணமாக உங்கள் அயலார் இயேசுவிடம் வருவதற்கு இடையூறாக இருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் உண்மையிலேயே இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறீர்களா, அல்லது இது வெறும் மாய்மாலமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இதயத்தைத் தொடும் கேள்வியின் பதில் உங்கள் வாழ்க்கையை மாற்ற்றட்டும்.
ஜெபம்:- கர்த்தராகிய இயேசுவே, எங்கள் இருதயங்களை ஆராய்ந்து, நாங்கள் எங்கே கீழ்ப்படியாமல் இருந்தோம் அல்லது கீழ்ப்படியத் தாமதமாக இருந்தோம் என்பதைக் காட்டுவீராக.. எங்கள் அலட்சியத்தை உடைத்து, எங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பத்துடன் இணைத்து, உம்முடைய அன்பை வெளிப்படுத்தும் கருவிகளாக மாற்றுவீராக. ஆமென்.
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
