WhatsApp
WhatsApp

மகிமையின் வெளிப்பாடு

Apr 26, 2026 By Hephzibah Stephen

வேதபகுதி -2 கொரிந்தியர் 4:7-18

நாம் நேசிக்கும் ஒருவர் மெதுவாக மரணத்துக்குள் செல்வதைப் பார்ப்பது வாழ்க்கையில் மிகவும் கடினமான அனுபவங்களில் ஒன்றாகும். 87 வயது வரை வாழ்ந்த என் அம்மா, தனது வாழ்க்கையின் கடைசி மாதங்களில் படுக்கையில் இருந்தார்கள். முடிவுக்காக காத்திருக்கும்போது எப்படிப்பட்ட எண்ணங்கள் அவர்கள் மண்தகில் ஓடியிருக்கும் என்று நான் யோசித்தது உண்டு. இது போன்ற தருணங்கள் நமது சொந்த பலவீனத்தையும் மரணத்தின் யதார்த்தத்தையும் நமக்கு விளக்குகின்றன, கெத்செமனே தோட்டத்தில் இயேசு சிலுவை பாடுகளை நினைத்து கலங்கி ஜெபித்தார்.

இயேசுவின் முன் இருந்த பாதையைப் சீடர்கள் புரிந்துகொள்ள வில்லை. இயேசு தனக்கு வரவிருக்கும் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் போன்றவைகளை பேசத் தொடங்கியபோது, அவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர் (மாற்கு 9; மத்தேயு 16) அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இயேசுவோடு இருந்தாலும், இயேசு உலகிற்கு வந்த நோக்கத்தை புரிந்து கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் இயேசு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை ஒரு உயர்ந்த மலையின் மீது அழைத்துச் சென்றார்.

அந்த மலையில் அசாதாரணமான ஒன்று நடந்தது. இயேசு ஜெபம் செய்தபோது, அவர்களுக்கு முன்பாக அவருடைய தோற்றம் மாறியது. அவரது ஆடைகள் பிரகாசமான வெள்ளை நிறமாகவும், பூமியில் உற்பத்தி செய்யக்கூடிய எதையும் விட பிரகாசமாகவும் இருந்தன. மோசேயும் எலியாவும் தோன்றி, அவர் பாடுகளை குறித்து அவருடன் பேசினர். சீடர்கள் கிறிஸ்துவின் மகிமையைக் கண்டனர். இம்மட்டும், அந்த மகிமை அவர்களுக்கு மறைக்கப்பட்டு இருந்தது. சிலுவைக்குப்பின் மகிமை உண்டு என்று அவர்கள் புரிந்து கொள்ளும்படியாகவே, அவர் அன்று தன மகிமையை அன்று வெளிப்படுத்தினார்.!

இது எந்த மலை என்று வேதத்தில் எழுதவில்லை.  ஆனால் பல வேத அறிஞர்கள் இது செசரியா பிலிப்பி அருகே உள்ள எர்மோன் மலையாக இருந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். அத்தகைய உயரங்களிலிருந்து, காட்சி மூச்சடைக்கக்கூடியதாக இருந்திருக்கும். ஆயினும் முக்கியமான பார்வை நிலப்பரப்பு அல்ல, அவர்கள் கண்ட கிறிஸ்துவின் மகிமை.

மலை உச்சியின் அனுபவங்கள் சக்திவாய்ந்தவை, ஏனெனில் அவை தற்போதைய போராட்டங்களுக்கு அப்பால் ஒரு வெளிப்பாட்டை நமக்குத் தருகின்றன. இந்த தருணம் சீடர்களை வரவிருந்தவற்றிற்கு தயார்படுத்தியது. விரைவில் அவர்கள் ஆண்டவரை கைது செய்து, அடித்து, சிலுவையில் அறையப்படுவதைக் காண்பார்கள்.  அந்த இருண்ட நேரங்களில் அவரது மகிமையின் நினைவுகள் அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்.

வாழ்க்கை மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்தது. நோயின் காலங்கள், அன்புக்குரியவர்களின் இழப்பு மற்றும் பணக்கஷ்டம் போன்ற பள்ளத்தாக்கு அனுபவங்களை கொண்டு வருகிறது. ஆனால் துன்பம் என்பது இறுதி அத்தியாயம் அல்ல என்பதை  அவருடைய மறுரூபம் நமக்கு நினைவூட்டுகிறது. இயேசு சிலுவையிலிருந்து உயிர்த்தெழுதலுக்கு கடந்து சென்றதைப் போலவே, கடவுளின் மகிமை இந்த வாழ்க்கையின் சோதனைகளுக்கு அப்பால் அவரது மக்கள் ஒவ்வொருவருக்கும் காத்திருக்கிறது.

என் நண்பரே, இன்று நாம் எந்தப் போராட்டங்களை எதிர்கொண்டாலும், அது என்றென்றும் நீடிக்காது என்ற வாக்குறுதியைப் பிடித்துக் கொள்வோம். ஒரு நாள், மலையில் இருந்த அந்த சீடர்களைப் போலவே, நாமும் அவருடைய மகிமையைக் காண்போம். நமது போராட்டங்களில் விடுதலை காண்போம்.

ஜெபம்:-   கர்த்தராகிய இயேசுவே, இன்று உள்ள சோதனைகளை கண்டு கலங்காமல், இந்த சூழ்நிலையிலும் வெளிப்படுத்தப்பட வேண்டிய மகிமையை நினைத்து நபிக்கையோடு இருக்க எனக்கு உதவுங்கள். ஆமென்.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *